பிரியாணிக் கடைக்கு ஸ்டாலினை போக வைத்தோமே..! : ஹெச்.ராஜா

குற்றாலம்: இணையதளத்திலும் இந்தியராக வாழும் ஆன்மீகத் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி – என்ற ஒரு நிகழ்ச்சி இன்று குற்றாலத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசினார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர் பேசியபோது, முன்பெல்லாம் நாம் செய்திகளை படிப்பதற்கு செய்தித் தாள் பார்ப்போம். செய்திகள் அப்படியே செய்திகளாகவே இருக்கும். கருத்துகளை தலையங்கம் வாயிலாக தருவார்கள். ஆனால் இப்போதெல்லாம் செய்திகளே கருத்துகளைத் தாங்கி வலியத் திணிக்கப் படுகின்றன.

இந்த சூழ்நிலையில், நாம் நினைக்கும் ஒரு கருத்தை பகிர்ந்து கொள்வதற்கான நல்ல தளமாக இன்று சோஷியல் மீடியா உள்ளது. நீங்கள் எதை ஆக்கபூர்வமாக சிந்திக்கிறீர்களோ, பகிர்ந்து கொள்வதற்கான சரியான தளம் சோஷியல் மீடியா. இந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், மீம்ஸ் போட்டு என்னை தாக்குவதாக திமுக.,வினர் நினைக்கின்றனர். அவற்றை ஏன் நீங்கள் நீக்குவதில்லை, அல்லது பதிலடி கொடுப்பதில்லை என்று என்னிடம் சிலர் கேட்கின்றனர். ஆனால், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது அவர்கள் போடும் மீம்ஸ்களால் மக்களுக்கு வெளிப்படுகிறது.

ஓசிபிரியாணிதிமுக., என ஹேஷ் டேக் போட்டு டிவிட்டர் மூலம் அடிக்கிற அடி தாங்காமல் தான் அன்று பிரியாணிக் கடைக்கு சமாதானம் செய்ய ஸ்டாலின் ஓடினார்… என்றார் ஹெச்.ராஜா.