சென்னை: இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலனுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அண்மைக் காலமாக மறைந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கு அந்த அந்தக் கட்சியினர் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்துமக்கள் கட்சி சார்பில் இத்தகைய வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கையில்,
பாரதத்தாயின் திருமகன் வீரத்துறவி ராமகோபாலன் அவர்களுக்கு பாரத தேசத்தின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” வழங்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் வேண்டுகோள்
மறைந்த துக்ளக் ஆசிரியர் திருமிகு “சோ”ராமசாமி இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி ராமகோபாலன் அவர்களைப் பற்றிக் கூறும் போது ஏதோ திரு ராமகோபாலன் தலையில் காவி குல்லா அணிந்து ஸ்டைலாக இருக்கிறார் என்று யாரும் எண்ணிவிடாதீர்கள், அவருடைய தலையில் சூயஸ் கால்வாய் போல அரிவாளால் பயங்கரவாதிகள் வெட்டினார்கள் என்று கூறுவார்.
இன்று ஆகஸ்ட் 14 பாரத நாடு பாகிஸ்தான் ,இந்தியா என்று இரு நாடுகளாக வெட்டிப் பிளக்கப்பட்ட நாள். 1947இல் தேசப்பிரிவினை நடைபெற்று அகதிகளாக வந்தவர்கள் ஆவடி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.
அரசுப் பணியில் இருந்தவர் தன்னுடைய வேலைகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு ,சொந்தக் குடும்பத்தை , எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அன்னை பூமிக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணம் செய்தவர் வீரத்துறவி ராம கோபாலன் அவர்கள். பிளந்த இந்த நாடு மீண்டும் ஒன்று சேர வேண்டும்.
தர்ம விரோதிகள், தேசவிரோதிகள் , தெய்வ விரோதிகள் பிரிவினைவாத சக்திகள் போன்றோருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து விலகிக் கொண்டு இருப்பவர் இராம கோபாலன். பக்தி படைத்த இந்துக்களை சக்தி படைத்தவர்களாக மாற்றிட விநாயகர் சதுர்த்தி பெருவிழா தமிழக மண்ணில் அறிமுகப்படுத்தி இன்று மாபெரும் ஹிந்து ஒற்றுமை பெருவிழாவாக நடைபெறுவதற்கு அடித்தளமிட்டவர்.
கன்னியாகுமரியில் கம்பீரமாக இன்று நிற்கும் விவேகானந்தர் பாறை விவேகானந்தர் நினைவிடம் கட்டுவதற்கு பெரு முயற்சி எடுத்தவர் திரு இராம கோபாலன். மீனாட்சிபுரம் மதமாற்றம் தடுத்து ஆன்மீக பெரியவர்கள் அரசியல் சக்தி பெரியவர்கள் அழைத்துச் சென்று இஸ்லாமிய மதமாற்றம் குறித்தான விழிப்புணர்வை தேசம் முழுக்க ஏற்படுத்தியவர் .
சமய நம்பிக்கைகள் குறித்து ஏளனம் செய்து பேசிய நாத்திக சக்திகளுக்கு எதிராக களம் கண்ட ஹிந்து மாவீரன் .
இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதா தேவியை மீட்டிடவே எம்பெருமான் இராமபிரானால் கட்டப்பட்ட ராமர் பாலத்தை காப்பதற்கு ராமர் பால பாதுகாப்பு இயக்கம் கண்டு மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் பெருமதிப்பிற்குரிய கு .சி.சுதர்சன் மற்றும் இன்றைய ஆர்எஸ்எஸ் தலைவரும் அன்றைய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளருமான பெருமதிப்பிற்குரிய மோகன் பாகவத் ஆகியோரிடம் ராமர் பாலம் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்கூறி குமரி முதல் இமயம் வரை
கையெழுத்து இயக்கம் நடத்தி அன்றைய ஜனாதிபதி மறைந்த அப்துல்கலாம் அவர்களை நேரில் சந்தித்து நாடு முழுக்க பெற்ற கையெழுத்துப் பிரதிகளை ஒப்படைத்து ராமர் பாலம் காத்திட்ட மாவீரன் சேது காவலன் ராம கோபாலன் .
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குறித்தும் பகவத்கீதை குறித்தும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கிண்டல் செய்து பேசியபோது கோபாலபுரம் இல்லம் சென்று அவர் வீட்டிற்கு முன்பாக இருக்கக்கூடிய ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் பகவத் கீதையை வைத்து கருணாநிதிக்கு நல்ல புத்தி கொடு என்று பிரார்த்தனை செய்து கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து பகவத்கீதையை கொடுத்த மாவீரன் ராமகோபாலன்.
இப்படி அவருடைய வாழ்க்கையை பல சிறப்புகளை சொல்லிக் கொண்டே செல்லலாம். “ஆண்டியின் கையில் திருவோடு உண்டு அது கூட உனக்கு இல்லை
ஊருக்கு வாழ்தலே யாகம் என்றாயே உன் போல துறவி இல்லை”
என்று கவிஞர் நந்தலாலா பாடினார்.
தேசப் பணிக்கு தன் வாழ்நாளை தந்திட்ட பாரதத் தாயின் திருமகன் வீரத்துறவி ராமகோபாலன் அவர்களுக்கு தேசத்தை ஆளும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே நீங்கள் “பாரத ரத்னா விருது” கொடுத்து கௌரவ படுத்துங்கள். விருதுகளுக்கு நம் மனம் அடிமையாகிவிடக் கூடாது என்று நமக்கு ஆர்எஸ்எஸ் கற்றுக் கொடுத்தது .
இருந்தாலும் கூட வீரத்துறவி ராமகோபாலன் அவர்களுக்கு கொடுக்கும் விருது, ராமகோபாலன் என்கிற தனிமனிதனை கௌரவப்படுத்த அல்ல, ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கௌரவப்படுத்த ,உயர்வு படுத்த, என்பதை நாம் உணர வேண்டும்.
ஏனென்றால் வீரத்துறவி ராம கோபாலன் அவர்கள் அடிக்கடி கூறுவார்… என்னிடம் ஏதாவது சிறப்புத் தன்மை இருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் நான் சார்ந்த ஆர்எஸ்எஸ் இயக்கம். என்னிடம் ஏதேனும் குறைகள் இருந்தால் அதற்கு இந்த ராமகோபாலன் காரணம் என்பார்.
ஆகவேதான் சொல்லுகிறோம். அவருக்கு கொடுக்கக்கூடிய பாரத ரத்னா விருது அவருக்காக அல்ல ஒட்டுமொத்த தேசத்தை கௌரவ படுத்துவதற்காக. கடவுள் மறுப்பாளர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிசீலனை செய்யக் கூடிய குழுவினரே தெய்வ நம்பிக்கையால் தேசத்தைக் காத்த மாவீரன் வீரத்துறவி ராம கோபாலன் அவர்களை கௌரவ படுத்துங்கள்.
அவருடைய சிறப்பு குணங்கள் குறித்து பாரத பிரதமருக்கும், பாரத ரத்னா விருது பரிசீலனை குழுவினருக்கும் கடிதம் எழுதிட அனைத்து தேச பக்தர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம். -என்று குறிப்பிட்டுள்ளார்.