சென்னை: கடந்த 12 ஆம் தேதி தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் ஆளுநர் மாளிகையில் இருக்கைகள் ஒதுக்கப் பட்டதில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை தஹில்ரமணியின் பதவி ஏற்பு விழாவின் போது ஏற்பட்ட குளறுபடிகளுக்கு விஜய கமலேஷ் தஹில்ரமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார் ஆளுநர். இதனை தலைமை நீதிபதி, புதன்கிழமை நேற்று காலை நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் முதன்மைச் செயலர் ஆர்.ராஜகோபால், செவ்வாய்க் கிழமை தனக்கு அழைப்பு கொடுக்கவந்தார் என்றும், அப்போது, அவரும் இதற்காக தனது மன்னிப்பைக் கோரினார் என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார். எனவே இந்த விவகாரத்தைப் பெரிது படுத்தாமல் இத்துடன் விட்டு விடலாம் என்று நீதிபதிகளில் ஒரு பிரிவினர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் சில நீதிபதிகளோ, தங்களுக்கு ப்ரோட்டோகாலை மீறி இருக்கைகளை பின்புறம் ஒதுக்கியதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். இருப்பினும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை உயர் நீதிமன்ற நீதிபதிகள் புறக்கணித்தனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால், நேற்று தேநீர் விருந்து அளித்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த விருந்தில், முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். தலைமை நீதிபதி மட்டும் இந்த விருந்தில் கலந்து கொண்டார். மற்ற நீதிபதிகள் இந்த விருந்தை புறக்கணித்தனர்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், முதல் வரிசையில் நீதிபதிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கப் படாமல், அமைச்சர்கள், அதிகாரிகளுக்குப் பின்னர் மூன்றாவது வரிசையில் நீதிபதிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கப் பட்டதாக பிரச்னை எழுந்தது. இதைக் கண்டித்து விருந்து நிகழ்ச்சியை நீதிபதிகள் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.