சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு குறித்து விசாரித்து வந்த விசாரணை ஆணைய தலைவர் ரகுபதி ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.
முன்னதாக, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், புதிய தலைமைs செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்த நிலையில், இதனை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் கலைத்து உத்தரவிட்டது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கடந்த திமுக ஆட்சியில் (2006-2011) புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டதால், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆணையத்துக்கு திமுக சார்பில் நீதிமன்றத்தின் மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு தடை பெறப்பட்டது.
இந்நிலையில் புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ஏன் அதற்கு கோடிக்கணக்கில் செலவழிக்க வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக அந்த ஆணையத்துக்கு அலுவலகம், ஊழியர்கள் என்று பெரும் தொகையை அரசு ஏன் செலவு செய்கிறது? மக்களின் வரிப்பணம் ஏன் வீணாகிறது என்று கேள்வி எழுப்பினார். இதை அடுத்து வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப் பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அமைக்கப்பட்ட ஆணையம் இது. இதனைக் கலைக்க வேண்டும் என்று திமுக., தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அரசு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பின்னர், ரகுபதி ஆணையத்தை கலைக்க உத்தரவிட்டார்.
அடுத்த 2 வாரங்களில் (இன்று அதற்கான காலக்கெடு) அலுவலகத்தை காலி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆவணங்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, தமிழகத்தில் இதுவரை செயல்படாத விசாரணை ஆணையங்கள் எவை என்பதை தமிழக அரசு கண்டுபிடித்து அவற்றை கலைக்க 4 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
விசாரணை ஆணைய நீதிபதிகள் அரசு பங்களாக்களில் தங்கியிருந்து விசாரிப்பது சரியில்லை. அரசு பங்களாக்களை காலி செய்துவிட்டு அரசு அலுவலகத்தை விசாரணைக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியது நீதிமன்றம்!
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இன்று ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பினார்.