திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் சேதமடைந்த பழைய கொள்ளிடம் பாலம் இடித்து அகற்றப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் பிரதான சாலையில், முன்னர் போக்குவரத்துக்கு பயன்பட்டது கொள்ளிடம் பாலம். கடந்த 1928ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம், மிகவும் குறுகலாக இருந்தது. இதனால் இந்தப் பாலத்துக்கு அருகில் புதிய பாலம் ஒன்று கட்டப் பட்டது. சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தின் வடிவில் கட்டப் பட்ட இந்தப் பாலமே தற்போது போக்குவரத்துக்கு பயன்பட்டு வரும் நிலையில், பழைய பாலம் கவனிப்பார் அற்று வெறும் காட்சிப் பொருளாகத்தான் இருந்தது.
இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் வந்த வெள்ளத்தின் வேகத்தால் பழைய இரும்புப் பாலத்தின் ஒரு தூண் வலுவிழந்து பாலம் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை இன்று பார்வையிட்டார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தப் பாலம் தற்போது காட்சிப் பொருளாக இருக்கிறது. நீர்வரத்து குறைந்தவுடன் பழைய பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.