சென்னை: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றது உண்மைதான் என பேராசிரியை நிர்மலாதேவி ஒப்புக்கொண்டதாக, உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த விவகாரத்தில், சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி., அளித்த அறிக்கை நீதிமன்றத்தில் அளிக்கப் பட்டது. அந்த அறிக்கையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருக்காகவே மாணவிகளிடம் தாம் பேசியதாக பேராசிரியை நிர்மலாதேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இது விவகாரத்தில், நியாயமாக, நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த வழக்கு விசாரணை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மகளிர் உரிமை தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது என்பதால், இந்த வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வின் விசாரணைக்கே பட்டியலிட நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு பரிந்துரை செய்தது.