சென்னை: வரும் ஆக.28 செவ்வாய்க்கிழமை திமுக.,வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.
வரும் செவ்வாய்க் கிழமை, திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலினும் பொருளாளராக துரைமுருகனும் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். காரணம், இதுவரை திமுக., தலைவர் பதவிக்காக ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரை.முருகனும் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். வேறு எவரும் இவர்கள் இருவரையும் எதிர்த்து மனு தாக்கல் செய்யவில்லை. எனவே ஒருமனதாக இருவரும் தேர்வு செய்யப் படுவார்கள் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 28-இல்...சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக பொதுக் குழு கூட்டம் வரும் 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. 50 ஆண்டுகளாகத் திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் கட்சியின் தலைமை உள்ளது. திமுகவின் பொதுச் செயலாளராக க.அன்பழகனே நீடிக்கிறார்.
அண்ணா காலத்தில் திமுகவில் தலைவர் பதவி என்பது இல்லை. பொதுச் செயலாளராகத்தான் அண்ணா இருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு தலைவர் பதவியை உருவாக்கி அதன் பொறுப்பை கருணாநிதி ஏற்றார். அதிலிருந்து அவரே தலைவராக இருந்து வந்தார். கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, திமுகவின் புதிய தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
கருணாநிதியின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ள கருணாநிதியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்துக்கு முன்பாக, வரும் 28-ஆம் தேதி திமுக தலைவராக ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
பொருளாளர் துரைமுருகன்: திமுகவின் பொருளாளர் பதவியையும் இப்போது மு.க.ஸ்டாலினே சேர்த்து கவனித்து வருகிறார். திமுகவில் ஒருவர் இரு பதவிகளை வகிக்கக் கூடாது என்று விதி உள்ளது. அதனால், பொருளாளர் பதவியை ஸ்டாலின் விட்டுக் கொடுக்க முன்வந்தார். அந்தப் பதவிக்கு துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
துணை பொதுச் செயலாளர்: மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி துணைப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
திமுகவின் முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.