சென்னை: தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய கிளம்பிய ஸ்டாலினுக்கும் பொருளாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய கிளம்பிய துரைமுருகனுக்கும் திருநீறாகிய விபூதியைப் பூசி விட்டு, வாழ்த்தும் ஆசியும் கொடுத்து அனுப்பி வைத்தார் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி காலமானதைத் தொடர்ந்து, திமுக.,வை வழிநடத்த தலைவர் பதவியில் ஸ்டாலினை அமர்த்துவது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி திமுக செயல் தலைவராக இருந்த ஸ்டாலின், தலைவர் பதவிக்கும், முதன்மை செயலாளராக இருந்த துரைமுருகன் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக இன்று காலை கருணாநிதியின் சமாதியில் வேட்புமனுவை வைத்து ஆசி பெற்ற இருவரும் பின்னர் கோபாலபுரத்துக்குச் சென்றனர். அங்கே அவர்கள் கருணாநிதியின் படத்துக்கு விளக்கேற்றி வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றனர். தொடர்ந்து அவர்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் வாழ்த்து கூறினர்.
பின்னர் ஸ்டாலினும் துரை முருகனும் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றனர். அப்போது அவர்கள் இருவரின் நெற்றியிலும் விபூதி வைத்து ஆசி வழங்கினார் தயாளு அம்மாள். அதனை தன் வழக்கப்படி உடனே ஸ்டாலின் தன் கையால் அழிக்கவில்லை. இதன் பின்னர் இருவரும் சேர்ந்து அண்ணா அறிவாலயத்துக்குச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கடந்த மாதம் திருவரங்கம் வந்திருந்த மு.க.ஸ்டாலினுக்கு கோயிலின் சார்பில் மரியாதை வழங்கப் பட்டது. அப்போது கோயில் பட்டர் ஸ்டாலினின் நெற்றியில் திலகம் வைத்தார். ஆனால் உடனே அதனை அழித்துவிட்டார் ஸ்டாலின்!