சென்னை: ‘நான் மட்டும் முதலமைச்சர் ஆகிவிட்டால், நான் போடும் முதல் கையெழுத்து, லோக் பால் சட்டத்தை வலிமையாக்கும் வகையில்தான் இருக்கும்’ என்று கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பேசிய கமல்ஹாசன் இவ்வாறு கூறினார். இங்கே நடைபெற்ற பெண் தொழில்முனைவோர்க்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில், 11 பிரிவுகளில் 35 பெண்களுக்கு விருதுகளும், 9 பெண்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்சியில் கலந்து கொண்டு பெண்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசிய கமல்ஹாசன், `மக்கள் மீதான நம்பிக்கையில்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். அரசியல் எனும் சாக்கடையை சுத்தம் செய்ய அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலைக் கண்டு ஒதுங்கி நிற்காமல், பெண்களும் அரசியலில் தவறாமல் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், திடீரென நடிகர் கமல்ஹாசனின் ஒரு கேள்வி எழுப்பினார். நீங்கள் முதலமைச்சரானால் உங்களுடைய முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் என்பதுதான் பார்த்திபன் கேட்ட கேள்வி. அதற்கு பதிலளித்த கமல்,`தற்போதைய லோக்பால் சட்டம் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது. நான் முதல்வர் ஆனால், மீண்டும் லோக்பால் சட்டத்தை வலிமையாக்கும் வகையில் என் முதல் கையெழுத்தைப் போடுவேன்’ என்றார்.
மேலும், கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தால் தாமும் அதில் பங்கேற்கவுள்ளதாகக் கூறினார் கமல்ஹாசன்.