சென்னை: திமுக., கட்சியின் என்னை இணைத்துக் கொள்ளவில்லை என்றால், அது கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மு.க. அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக., தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார்கள். இது குறித்த அறிவிப்பு, இன்று நடக்கும் திமுக., பொதுக்குழுவில் முறையாக அறிவிக்கப்படவுள்ளது. இதற்கிடையே வரும் செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள, பேரணி குறித்து அழகிரி திமுக நிர்வாகிகள் சிலருடன் பேசி வருகிறார். கடந்த நான்கு நாட்களாக அவர்களுடன் பேசி வரும் அழகிரி, இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், கருணாநிதி இல்லாததால் கட்சியைக் காப்பாற்ற முடிவெடுத்தேன். எங்களை கட்சியில் சேர்க்கவில்லை என்றால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். தலைவராக கருணாநிதி இருந்த போது என்னைக் கட்சியில் சேர்க்கும் படி கூறியுள்ளார். ஆனால் அப்போது சிலர் அவரைத் தடுத்திருக்கிறார்கள். அவர் மனதை மாற்றியிருக்கிறார்கள்.
என்னை திமுக.,வில் சேர்க்கக் கூடாது என்று சிலர் ஆசைப்படுகிறார்கள். கருணாநிதி இருந்த வரை அமைதியாக இருந்தேன். இப்போது கட்சி மோசமான நிலைக்கு வந்துவிட்டது. அதைக் காப்பாற்றும் எண்ணத்தில் அவர்களிடம் என்னைக் கட்சியில் சேர்க்கச் சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் களமிறங்கியுள்ளேன். தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று பேரணி நடத்த உள்ளேன். தொண்டர்கள்தான் என்னை பேரணி நடத்தும்படி கூறினார்கள்.. என்று கூறினார் மு.க.அழகிரி.