தமிழக அரசியலில் பெரும்புள்ளியாக இருக்கும் ஸ்டாலினையும் ஒரு புள்ளியாக இருக்கும் டிடிவி தினகரனையும் அடைமொழி கொடுத்து அழைத்திருக்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அடைமொழி இல்லாமல் திராவிடக் கலாசாரம் இல்லை என்பதால், அவர்களுக்குக் கொடுத்த அடைமொழிகள் இப்போது பரபரப்பாகப் பேசப் படுகிறது.
நாட்டில் உள்ள வில்லன் ஸ்டாலின் என்றால், வீட்டில் உள்ள வில்லன் டிடிவி தினகரன் என அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்ததுதான் ஹைலைட்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் விளக்கும் வகையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆர்.பி.உதயகுமார், நாட்டில் உள்ள வில்லன் ஸ்டாலின் என்றால் வீட்டில் உள்ள வில்லன் டிடிவி தினகரன். ஸ்டாலின் ஆள் பிடிக்காத வில்லன். தினகரன் ஆள் பிடிக்கும் வில்லன். இவர்களிடம் கட்சியினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிக்கினால் யாரை வேண்டுமானாலும் அள்ளிக்கொண்டு செல்கிற வில்லன் தினகரன். இவர்கள் இருவரிடமும் எச்சரிக்கையாக இருந்தால்தான் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும் என்றார்.
ஆக இன்னமும் டிடிவி தினகரனை அதிமுக.,வின் அங்கமாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!