சென்னை: திருவேற்காடு பெண் தற்கொலை விவகாரகத்தில் காவல் ஆய்வாளர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை திருவேற்காடு செந்தமிழ்நகரைச் சேர்ந்தவர் ரேணுகா. இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். ரேணுகா வீட்டருகே வசிக்கும் அமிர்தவள்ளி என்பவருக்கும் கடந்த சில வாரங்களாக இடம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது.
திருவேற்காடு காவல் நிலையத்தில் ரேணுகா புகார் அளித்துள்ளார். புகார் அளித்த ரேணுகாவின் கணவர் கஜேந்திரனை திருவேற்காடு காவல் நிலையத்திற்கு பிடித்து வந்து விசாரித்துள்ளனர்.
இது குறித்து ரேணுகா திருவேற்காடு காவல் நிலையத்திற்கு வந்து போலீசாரிடம் கேட்டுள்ளார். மேலும் போலீசார் ரேணுகாவை ஆபாசமாக திட்டி விரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து ரேணுகா நேற்று திருவேற்காடு காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். படுகாயமடைந்த ரேணுகா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.
திருவேற்காடு காவல் ஆய்வாளர் அலெக்சாண்டர், உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் இதற்கு காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரேணுகா பதிவு செய்திருந்த ஆடியோவை உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகார் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.