சென்னை: சென்னை மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் பயணித்தபடி, பட்டாக் கத்தியை சாலையில் உரசியபடி மிரட்டி, வாகன ஓட்டிகளையும், பஸ்ஸி பயணம் செய்தவர்களையும் அச்சுறுத்திய கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப் பட்டார். இன்னொரு மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை செங்குன்றத்தில் இருந்து பிராட்வே செல்லும் 57 எஃப் பேருந்தின் இரு படிக் கட்டுகளிலும் நின்று தொங்கியபடி மாணவர்கள் சிலர் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு பயணித்தனர்.
படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற அந்த மாணவர்களில் முன்னும் பின்னுமாய் இருவர், கையில் உள்ள பட்டாக்கத்தியால் சாலையில் உரசி தீப்பொறி ஏற்படுத்தியபடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. இதனால் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளும், பேருந்தின் அருகில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் பீதியுடன் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இதை பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தவர் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்.
இந்நிலையில், போலீஸார் அந்த மாணவர்களில் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஒரு மாணவரை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற மாணவர்களையும் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கெனவே சென்னையில் இதே போல் வியாசர்பாடி பகுதியில் புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்த மாணவர்கள் பட்டாக்கத்தியை ரயில்வே பிளாட்பார்மில் தேய்த்தபடி சென்றனர். அவர்களை பிடித்த போலீசார், புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர்.