ஸ்டாலினின் தலைவர் பதவி என்பது பட்டாபிசேகம் செய்ததுதான்! மூத்தவர் இருக்க இளையவருக்கு பதவி கொடுப்பது ஏன்? என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கடுமையான தாக்குதல் தொடுத்தார்.
கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் புதிய கட்டிடப் பணிகள் குறித்து, கரூர் மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை, நேரில் ஆய்வு செய்தார்.
டைல்ஸ் எல்லாம் குஜராத்திலிருந்து வரவழைக்கின்றேன் என்று கூறி ஆய்வு நடத்திய மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தி.மு.க தலைவர் ஸ்டாலின் எந்த தேர்தலிலும், அ.தி.மு.க வையும், பா.ஜ.க வையும் வீழ்த்துவோம் என்று கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு., அதிமுகவை வீழ்த்த ஸ்டாலினுக்கு சக்தி கிடையாது என்றும் இதனை அவரே ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
மறைந்த திமுக தலைவரைப் போல் தன்னால் செயல்பட முடியாது எனக் கூறியுள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டது மூத்தவர் இருக்க இளையவர் பட்டாபிஷேகம் செய்து கொண்டது போலத்தான் என்றார் தம்பிதுரை.
திடீரென பிஜேபியை வீழ்த்துவேன் என்கிறார். பிஜேபி ஒரு தேசியக் கட்சி என்றும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்திற்கு அமித்ஷா வருவதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அது தவிர்க்கப்பட்டதின் விரக்தியால்தான் ஸ்டாலின் அவ்வாறு கூறியிருக்கிறார். இந்த உண்மை நிலையைக் கூறுவதால் அதிமுக பிஜேபிக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறமுடியாது. இதே திமுக வாஜ்பாய் ஆட்சியின் போது பிஜேபியுடன் இணைந்து 5-ஆண்டு காலம் ஆட்சியில் தொடர்ந்தவர்கள் தான் தற்போது பிஜேபியை வீழ்த்துகிறேன் எனக் கூறுகிறார்.
மேலும், தி.மு.க வில் தற்போது தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் பதவி ஏற்றதற்கு, மூத்தவர் (அழகிரியை மனதில் வைத்துக் கொண்டு குறிப்பிட்டு) இருக்கும் போது இளையவருக்கு பட்டாபிஷேகம் செய்து கொண்டது போலத்தான் என்று பளிச் எனக் கூறினார்.