காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால் காவிரியின் உபரி நீர் நேரடியாக வங்கக் கடலில் கலக்கிறது.
நகரமயமாக்கல், தொழில் வளர்ச்சி போன்ற காரணங்களால் பெருகி வரும் மக்கள் தொகையை சமாளிக்க நீர்மேலாண்மை, உணவு உற்பத்தியில் தன்னிறைவு போன்றவற்றை அடைய நாம் அதிகம் சிரமப்பட வேண்டியுள்ளது. பெய்யும் மழைநீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகளையோ, வறட்சியான நதிகளை இணைக்கவோ நாம் எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் காவிரிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் மேட்டூர் அணையில் மட்டும் 97 டிஎம்.சி தண்ணீரை சேமிக்க இயலும். கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக காவிரியில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 2.20 லட்சம் கன அடி நீரும், பவானிசாகர் அணையில் 70,000 கன அடி நீரும், அமராவதி ஆற்றில் 15,000 கன அடி நீரும் என மொத்தமாக 3.05 லட்சம் கன அடி நீர் காவிரி டெல்டாவில் திறந்துவிடப்பட்டுள்ளது. இவற்றில் 90 சதவீதம் தண்ணீர் கடலில் மட்டுமே கலந்து வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 120 டி.எம்.சி தண்ணீர் காவிரி வழியாக கடலில் கலந்துள்ளதாக பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இப்படி வீணாக கடலில் கலக்கும் நீரை காவிரி – குண்டாறுகளில் திருப்பிவிடுவதற்காக தான் முதற் கட்டமாக கரூர் மாவட்டம், மாயனூர் அகண்ட காவிரியின் குறுக்கே கதவணை கட்டப்பட்டது. இரண்டாம் திட்டமாக அணையிலிருந்து 20 மீட்டர் அகலம், 6 மீட்டர் ஆழத்திற்கு கால்வாய் ஒன்றை 255 கி.மீட்டருக்கு வெட்டப்பட்டு அதை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குண்டாறு நதியோடு இணைப்பதாகும்.
தற்போது மாயனூரில் 1.04 டி.எம்.சி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனால் 2.30 லட்சம் கன அடி தண்ணீர் வருவதால், அணையை ஒட்டிய கிராமங்களான திருமுக்கூடலூர், மேல்மாயனூர், அரங்கநாதன்பேட்டை, கும்பகுழி உள்ளிட்ட இடங்களில் காவிரி ஆறு விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது.
இந்த திட்டம் இணைக்கப்பட்டிருந்தால் காவிரியில் பாய்ந்த வெள்ள நீரை வீணாக்காமல் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் வழியே கால்வாய் மூலம் திருப்பி சேமித்திருக்கலாம். இந்த திட்டத்தை திமுக 3,290 கோடி மதிப்பீட்டில் 2008இல் அறிவித்து முதல் கட்டமாக அணை கட்டப்பட்டது. ஆனால், கால்வாய் அமைக்கவில்லை.
இந்த திட்டம் செயல்படும்போது, காவிரியின் மாயனூரில் கட்டப்பட்டுள்ள கதவணையில் இருந்து திருச்சி மாவட்டம் அரியாறு, புதுக்கோட்டை மாவட்டம் அக்கினியாறு, வெள்ளாறு, சிவகங்கை மாவட்டம் மணிமுத்தாறு, ராமநாதபுரம் மாவட்டம் வைகையாறு, கிருதுமால் நதி, கானல் ஓடை மற்றும் விருதுநகர் மாவட்டம் குண்டாறு என 15க்கும் மேற்பட்ட ஆறுகள் இணைக்கப்படும். இதனால் 3,37,717 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கும் பட்சத்தில் வீணாக கடலில் சென்று கலக்கும் வெள்ள நீரை தடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வறட்சியையும், குடிநீர் தட்டுப்பாட்டையும் போக்கலாம்.
காவிரியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, கடந்த 2005 ஆம் ஆண்டில் 70.96 டி.எம்.சி தண்ணீரும், 2006 ஆம் ஆண்டில் 42.85 டி.எம்.சி தண்ணீரும், 2007 ஆம் ஆண்டில் 64.41 டி.எம்.சி தண்ணீரும், 2008 ஆம் ஆண்டில் 78.15 டி.எம்.சி தண்ணீரும், 2009 ஆம் ஆண்டில் 65.42 டி.எம்.சி தண்ணீரும், 2010 ஆம் ஆண்டில் 39 டி.எம்.சி தண்ணீரும், 2011 ஆம் ஆண்டில் 20 டி.எம்.சி தண்ணீரும் வீணாக கடலில் கலந்துள்ளது.
#Cauvery_Gundaru_Linking #காவேரிகுண்டாறுஇணைப்பு
– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்