சென்னை: கோவை பேரூர் மடாலயத்தின் ஆதின கர்த்தராக விளங்கிய சாந்தலிங்க ராமசாமி அடிகள் இன்று தமது 97வது வயதில் சித்தி அடைந்தார். அன்னாரை நினைவு கூர்ந்து தனது சிரத்தாஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன்.
அவர் தமது சிரத்தாஞ்சலி குறிப்பில், ஆன்மிக ஜோதியாக விளங்கிய பேரூர் ஆதினகர்த்தர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் சித்தியடைந்தார். அவருக்கு இந்து முன்னணியின் சார்பில் சிரத்தாஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆன்மீக பேரொளியை பரப்பிட நமது ஞானியர் பரம்பரை, தொன்று தொட்டு சிவத்தொண்டும், ஆன்மிகத் தொண்டும் செய்தவர தமிழகத்தின் பல பகுதிகளில் ஆதினங்களை, மடங்களை நிறுவினர்.
அந்த ஞான பரம்பரையில் வந்த புகழ்மிக்க பேரூர் ஆதினத்தின் தலைவராக இருந்து அருள் வழிகாட்டி வந்தவர் சீர்வளர்சீர் பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவர்கள். அவர் இன்று சிவனடியை அடைந்துள்ளார்.
சுவாமிகள், இந்து சமுதாயத்தின் மீது தீராத அன்பு கொண்டவர். கோவை மண்டலத்தில் ஆன்மீக பணிக்கு உற்ற துணையாக விளங்கியவர். காலம்காலமாக, சீரிய ஆன்மீகப் பணியை செய்து வரும் பேரூர் ஆதினத்தின் பெருமைக்கு பெருமை சேர்த்தவர்.
திருக்கயிலாயமரபு மெய்கண்டார் வழிவழி பேரூர் ஆதீன மகா சன்னிதானம் சீர்வளர்சீர் இராமசாமி அடிகளார் அவர்கள் சிவபதம் அடைந்ததற்கு, இந்து முன்னணி சிரத்தாஞ்சலியை செலுத்துகிறது. – என்று குறிபிட்டுள்ளார்.