கோவை: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத்தை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிக், ஜாபர், சாதிக், இஸ்மாயில், சம்சுதீன், சலாவுதின் ஆகிய 5 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு, கோவையில் இந்து முன்னணியைச் சேர்ந்த சசிகுமார் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முபாரக், சதாம் உசேன், சுபேர், அபுதாஹிர் என 4 பேரை சிபிசிஐடி., போலீசார் கைது செய்தனர். என்.ஐ.ஏ., எனப் படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வரும் நிலையில், கோவையில் இந்து இயக்க பிரமுகர்களைக் கொல்வதற்கான சதித் திட்டத்துடன் சென்னையில் இருந்து கோவைக்கு சிலர் ரயிலில் செல்வதாக, மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கோவை போலீசாருக்குத் தெரிவித்தனர். இதை அடுத்து அந்த ரயிலில் போலீசார் சோதனை நடத்தினர்.
அந்த ரயிலில் பயணம் செய்த சென்னை வியாசர்பாடி, புதுநகரைச் சேர்ந்த ஜாபர் சாதிக்அலி (29), ஓட்டேரியைச் சேர்ந்த சலாவுதீன் (25), பல்லாவரத்தைச் சேர்ந்த சம்சுதீன் (25), திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில் (25) என 4 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை ரயில் நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்ல வந்திருந்த கோவையைச் சேர்ந்த ஆசிக் (25) என்பவரும் போலீஸில் பிடிபட்டார். அவர்களை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். சென்னையில் இருந்து வந்த மத்திய புலனாய்வுப் பிரிவினர், சிறப்பு புலனாய்வுப் பிரிவினர், கோவை போலீஸ் அதிகாரிகள் என விசாரணை நடத்தினர்.
கோவை போத்தனூரில் நடைபெற்ற ஒரு கைதியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் கோவையில் வசித்து வரும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி பேச்சாளர் மூகாம்பிகை மணி, சக்தி சேனா நிறுவனர் அன்புமாரி உள்ளிட்ட இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யும் சதியுடன் வந்ததாகவும் கூறியுள்ளனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து வந்த 4 பேரும், கோவை ஆசிக்குடன் பேஸ்புக் மூலம் அறிமுகமானார்களாம். அவர்கள் இந்து இயக்க பிரமுகர்களின் பேஸ்புக் பக்கங்களைப் பார்த்து, எதிர்க் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஆசிக் உதவியுடன் இந்து இயக்க பிரமுகர்களின் முகவரியை அறிந்துகொண்டு, தங்களது சதியை நிறைவேற்றுவதற்காக கோவை வந்தனராம்.
பிடிபட்ட 5 பேர் மீதும் கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசில் வழக்கு பதியப்பட்டுள்ளது. உபா (யு.ஏ.பி.ஏ.) சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுவது, மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது, அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது, கூட்டு சதி, சட்ட விரோதமாகக் கூடி சதி ஆலோசனை நடத்துவது உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு அவர்கள் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.