திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு திருக்குவளையில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. திமுக தொண்டர்கள் ஸ்டாலினுக்கு வீணை செங்கோல் வழங்கி கௌரவித்தனர்.
திமுக தலைவராக பொறுப்பேற்ற மு க ஸ்டாலின் முதன்முறையாக இன்று நாகை மாவட்டம் திருக்குவளைக்கு வந்திருந்தார். திருக்குவளை வந்த மு க ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக சார்பிலும், திருக்குவளை கிராம மக்கள் சார்பிலும் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற மு க ஸ்டாலின் அங்கே அஞ்சுகம் அம்மையார், முத்துவேலர், முரசொலி மாறன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்குள்ள வருகை பதிவேட்டில், ‘’தலைவர் அவர்கள் பிறந்த ஊர் திருக்குவளைக்கு பலமுறை வந்துள்ளேன். தலைவருடனும் வந்திருக்கிறேன் தனியாகவும் வந்திருக்கிறேன்! இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வந்துள்ளேன். கழகத் தலைவராக வந்திருந்தாலும் தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டனாக அவர் காட்டிய வழியில் எனது பயணம் தொடர்ந்து தொடரும் வாழ்க கலைஞர்’’ என கலைஞர் இல்ல வருகை பதிவேட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் கையொப்பமிட்டார்.
பின்னர் திருக்குவளை கிராமத்தைச் சேர்ந்த பாரதி-சூர்யா தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு கருணாநிதி என்று பெயர் சூட்டினார். அதனைத் தொடர்ந்து திமுக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு திமுகவினரும் திருக்குவளை கிராம மக்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது மேடையில் ஸ்டாலினுக்கு வீணை, செங்கோல் மற்றும் புத்தகங்களை பொதுமக்கள் பரிசாக வழங்கினர்.
பின்னர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் திருவாரூருக்கு புறப்பட்டுச் சென்றார்.