திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஏபிவிபி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரதீய வித்யார்த்தீ பரிஷத் மாணவர் அமைப்பினர் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏபிவிபி மாணவர் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் பிரித்விராஜன் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சங்கரன் கோவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக்கல்லூரியில் உள்ள பிரச்னைகள் குறித்து ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்!
மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை சமர்ப்பித்திருக்கிறார் தொல்.திருமாவளவன். மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் ஆய்வுக் கட்டுரை வழங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் வழங்கினால் ஏபிவிபி மிகப் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்!
தமிழுக்கு இலக்கணம் வகுத்த பூமியில் பல்கலைக்கழகத்தில் தமிழில் பெயர் எழுதக் கூடாது என்று உத்தரவு இட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மாணவர்கள் தமிழில் பெயர் எழுத ஆவன செய்ய வேண்டும்.
இவை குறித்து பரிசீலிக்காவிட்டால், துணைவேந்தருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். பல்கலை முன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்.
ஒரு பாடத்தை ஒரு ஆசிரியர் கொண்டு நடத்த வேண்டும். ஒரு ஆசிரியரே பல பாடங்களை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.