சென்னை: போதைப் பாக்கு குட்கா முறைகேடு புகார் தொடர்பாக தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகள் உள்ளிட்ட மொத்தம் 40 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், முன்னாள், இந்நாள் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் வீடுகளிலும் இந்த சோதனை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கடந்த வாரம் குட்கா ஆலை உரிமையாளர் மாதவ ராவிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடத்தப் பட்டு வருகிறது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் தாமாக முன் வந்து பதவி விலக வேண்டும் என்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருக்கிறார்.