சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில், குட்கா வியாபாரி மாதவராவிடம் இருந்து பணம் கைமாறலில் தரகர்களாக செயல்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் என தமிழகத்தில் சுமார் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இந்நிலையில் பணம் கைமாறலில் தரகர்களாக செயல்பட்ட 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குட்கா வியாபாரி மாதவராவிடம் இருந்து பணத்தைப் பெற்று அதிகாரிகளிடம் கொடுத்த இடைத் தரகர்கள் ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட தரகர்கள் இருவரையும் விசாரணைக்குப் பிறகு தில்லி அழைத்துச் செல்ல சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, நேற்று குட்கா ஊழலில் தொடர்புடையதாக தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவரும் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இந்நிலையில், அவர்கள் இருவரும் தில்லிக்கு விசாரணைக்கு செல்வதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, சுங்க மற்றும் கலால் வரித் துறை அதிகாரிகளிடமும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, குட்கா முறைகேட்டில் தொடர்புடையதாக காவல் ஆய்வாளர் சம்பத் என்பவரின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ராயபுரத்தில் காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சம்பத்தின் வீட்டில் சோதனைக்கு பிறகு சீல் வைக்கப்பட்டது.
குட்கா ஊழல் விவகாரம் பெரிய அளவில் உருவெடுத்துள்ளது. காவல் துரை அதிகாரிகள் தொடங்கி, பல தரப்பும் இதில் சம்பந்தப் பட்டிருப்பதால், தமிழகத்தில் பெரிய அளவில் இது பேசப்படுகிறது.