சென்னை: சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்புகள் இருந்தன. இதனை தொலைவிலேயே கண்டுவிட்ட ரயில் ஓட்டுனர், வண்டியை நிறுத்த முயன்றார். இருப்பினும் வண்டி மெதுவாக வந்து சிலாப்புகள் மீது ஏறி இறங்கின. இதனால் அந்த சிமிண்ட் சிலாப்புகள் நொறுங்கின.
இருப்பினும் ரயில் ஓட்டுநரின் துரித செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. இந்தச் செய்தி ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாங்கள் தினந்தோறும் சென்று வரும் ரயிலில் ஏதாவது அசம்பாவிதம் நேரும் முன்னர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அச்சத்துடன் கோரிக்கை வைத்தனர்.
மது போதையில் யாராவது சிமெண்ட் சிலாப்பை தண்டவாளத்தில் வைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இந் நிலையில், இது குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி மீண்டும் சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியை உடனே வந்து பார்வையிட்டார் ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு. தொடர்ந்து அங்கே விசாரணை மேற்கொண்டு சுமார் மூன்று கி.மீ.தொலைவுக்கு நடந்தே வந்து அந்தப் பகுதியைப் பார்வையிட்டார்.
இதனை அடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ரயிலைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் சிமிண்ட் சிலாப் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட பணம் திரட்டுவதற்காக தண்டவாளத்தில் 3 பேர் சிமெண்ட் சிலாப் வைத்தது தெரிய வந்தது.
சிமெண்ட் சிலாபில் உள்ள கம்பியை விற்று மது குடித்த 3 மாணவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.