வரும் 10ம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து, அந்த சங்கத்தின் நிறுவுனர், மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 10ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது பொதுமக்கள் மீதும், வணிகர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய சுமை என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் 2010ல் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு “எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோலிய பொருட்களில் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம்” என அனுமதி அளித்து விட்டு தற்போது “ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை” போல காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதுமட்டுமின்றி எதற்கெடுத்தாலும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அரசியல் கட்சிகள் தாங்கள் தொடர்புடைய எந்த ஒரு வணிக நிறுவனங்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்க முன் வருவதில்லை.
எனவே வரும் 10ம் தேதி காங்கிரஸ் விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஆதரவளிப்பதில்லை எனவும், அன்றைய தினம் பொதுமக்களுக்கு பால் தங்குதடையின்றி விநியோகம் செய்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இனி வருங்காலங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் எந்த அரசியல் கட்சிகளானாலும் முதலில் தாங்கள் தொடர்புடைய வணிக நிறுவனங்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்க உத்தரவிட்டு அதன் கடிதத்தை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து விட்டு முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கட்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். -என்று குறிப்பிட்டுள்ளார்.