போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்த புல்லட் நாகராஜன் கைது செய்யப் பட்டது எப்படி என்று தனிக்காவலர் காசிராஜன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். கடந்த 15 ஆண்டுகளாக புல்லட்டில் சென்று நகைப்பறிப்பில் ஈடுபடும் புல்லட் நாகராஜன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த 2003ஆம் ஆண்டு பெரியகுளம் வடக்கு அக்ரகாரத்தில் உள்ள வங்கி ஒன்றில் காசாளாரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் புல்லட் நாகராஜன் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால், அதனை போலீசாரால் இன்னும் நிரூபிக்க இயலவிலை.
பெரியகுளத்தை அடுத்த தேவதானப்பட்டியில் ஆட்டுக்கிடையை திறந்து 100 ஆடுகளை திருடிச் சென்றது உள்ளிட்ட வழக்குகளும் நாகராஜன் மீது உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் பெரியகுளம் நீதிமன்றத்திற்கு வாய்தாவிற்கு வந்தபோது உடன் வந்த போலீசாரிடம் புல்லட் நாகராஜன் சாமர்த்தியமாகப் பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, வீட்டுத் திண்ணையில் போலீசாரை அமர வைத்துவைட்டு பின்வாசல் வழியாக தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
வடிவேல் பட காமெடி பாணியில் இப்படி பலமுறை போலீஸாரிடம் இருந்து புல்லட் நாகராஜன் தப்பிச் சென்றுள்ளதாக போலீஸாரே கூறுகின்றனர்.
இதனிடையே ஒரு ஆடீயோ பதிவு ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக தளங்களில் வைரலாகப் பரவியது. அதில், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், பெரியகுளத்தை அடுத்த தென்கரை காவல் ஆய்வாளர் மதனகலா உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்து நாகராஜன் பேசியிருந்தார். இந்த ஆடியோ பதிவுகள் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தின.
இந்நிலையில் புல்லட் நாகராஜனைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடினர். தென்கரையில் புல்லட் நாகராஜன் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் தேடலைத் தீவிரப் படுத்தினர். தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பைக்கில் சென்ற நாகராஜனை காவலர் காசிராஜன் விரட்டிச் சென்றார். அவரிடம் இருந்து தப்பிய நாகராஜன், இரண்டு மூன்று தெருக்களில் வண்டியை விட்டு தப்பிக்க முயன்றார். ஆனால் ஒரு சர்ச் வாசலில் மாட்டிக் கொண்டார். இதனிடையே அவர் கையில் வைத்திருந்த கத்தியால் தன்னைப் பிடிக்க முயன்ற போலீசார் காசிராஜனைத் தாக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஏடிஎஸ்பி சுருளிராஜன் உடன் வந்து காப்பாற்றியதாக காசிராஜன் கூறியுள்ளார். தற்போது தென்கரை காவல் நிலையத்தில் புல்லட் நாகராஜனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புல்லட் நாகராஜனைப் பிடித்தது குறித்து தனிப்பிரிவு காவலர் காசிராஜன் கூறியபோது, தென்கரையில் நாங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோம், அப்போது அந்த வழியாக புல்லட் நாகராஜ் பைக்கில் வந்தார். நானும் அவனை பின் தொடர்ந்து மடக்கினேன். கைது செய்யப்பட்டபோது ரவுடி புல்லட் நாகராஜ் என்னை தாக்க முற்பட்டான். அப்போது 2 கத்திகள், போலி துப்பாக்கிகள் வைத்திருந்தான். புல்லட் நாகராஜ் கால் சற்று ஊனமான ஒரு மாற்றுத்திறனாளி என்றார்.