புதன் கிழமை சுபமுகூர்த்த நாள் என்பதாலும், அடுத்து விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதாலும் தமிழகத்தில் பரவலாக பூக்களின் விலை உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
முக்கியமாக, ஈரோடு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் சம்பங்கி பூ விலை கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் விடப்பட்டு கோவை, பெங்களுரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப் படும்.
நேற்று, சம்பங்கி பூ விலை கிலோ ரூ.200க்கு விற்பனையான நிலையில், இன்று கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.500க்கு விற்பனையாகிறது. இதனால் சம்பங்கி பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இருப்பினும் சிறிய அளவில் விநாயகர் சிலைகள் வாங்கி வைத்து பூஜைகளை நடத்துபவர்கள் வருத்தத்தில் உள்ளனர். பூக்கள் உச்ச பட்ச விலையில் விற்பனையாவது பண்டிகை கொண்டாடும் மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.