திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டதில், 62 விநாயகர் சிலை விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப் பட்டுள்ளன என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முன்னதாகவே, பதற்றம் கூடிவிட்டது. போலீஸாருக்கும், இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே மனஸ்தாபங்கள் முளைவிட்டன. தங்களுக்கு அதிக நெருக்கடி கொடுப்பதாகவும், போலீஸாரின் அராஜகப் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் சென்ற மாதமே அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலை நிறுவுதல் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்த தகவல்படி,
திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,விநாயகர் சிலை வைக்கவும் ஊர்வலமாக சென்று கரைக்கவும் பல்வேறு தரப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்தும் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு 508 மனுக்கள் பெறப்பட்டது.
அவற்றுள் 446 மனுக்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டது். அவற்றில் 316 சிலை அமைப்பாளர்கள் காவல்துறையின் அனுமதி ஆணையை பெற்றுச் சென்றுள்ளனர். மீதமுள்ள 130 சிலைகளுக்கான அனுமதி ஆணையை சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் காவல் துறையை அணுகி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் என அடையாளம் காணப்பட்டு, இந்தக் காரணங்களுக்காக அத்தகைய இடங்களில் அனுமதி கோரிய 62 மனுக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.