ஆட்டோ சங்கர் கூட்டாளியான ஆயுள் கைதிக்கு மதுரையில் இன்று திருமணம்

சென்னை: ஆட்டோ சங்கர் கூட்டாளியும், ஆயுள் தண்டனைக் கைதியுமான ஆட்டோ செல்வராஜுக்கு புதன்கிழமை இன்று மதுரையில் திருமணம் நடைபெறுகிறது. இதனால், அவருக்கு 35 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கும்படி பாளையங்கோட்டை மத்தியச் சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்டோ சங்கர் தூக்குக்குப் பின்னர் ஆட்டோ செல்வராஜ், மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஆயுள் தண்டனைக் கைதி ஆட்டோ செல்வராஜை திருமணம் செய்ய உள்ளதாகவும், எனவே, அவருக்கு 2 மாதம் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் கலாராணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், நான் மதுரையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் நர்சாக பணி செய்கிறேன். என் தாயாரின் தம்பியும், என்னுடைய தாய்மாமாவுமான செல்வா என்ற செல்வராஜ் ஆயுள் தண்டனைக் கைதியாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார். இவருக்கும், எனக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி மதுரை, ஸ்ரீநிதி ஓட்டலில் நடைபெறுகிறது. இந்த திருமணத்துக்காக செல்வராஜூக்கு 2 மாதம் விடுப்பு வழங்க வேண்டும் என்று அவரது மைத்துனர் சிறைத்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தார். அந்த மனு பரிசீலனையில் உள்ளது. எனவே, எங்களது திருமணத்துக்காக, மணமகனான என் மாமாவுக்கு 2 மாதம் விடுப்பு வழங்க சிறைத்துறை கூஅம்டுதல் டி.ஜி.பி., பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் – என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், மனுதாரருக்கும், ஆயுள் கைதி செல்வராஜுக்கும் மதுரையில் உள்ள ஓட்டலில் திருமணம் நடைபெற உள்ளது என்பதை மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதி செய்துள்ளார். இதனடிப்படையில் இந்த மனுவை ஏற்றுக்கொள்கிறேன். பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர், கைதி செல்வராஜுக்கு ஏப்ரல் 6 தேதி முதல் மே 10ஆம் தேதி வரை சாதாரண விடுப்பு வழங்க வேண்டும். செல்வராஜ், மே 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் சிறைக்கு சென்றுவிட வேண்டும். அதே நேரம், கைதிகளுக்கு இதுபோன்ற விடுப்பு வழங்கும்போது, மேற்கொள்ளப்படும் சட்டப்படியான நடவடிக்கையை சிறை நிர்வாகம் மேற்கொள்ளலாம் என்றார்.