நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குளிக்கத் தகுந்த பாதுகாப்பான அளவில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப் பட்டுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர். குடும்பத்துடன் குளித்து மகிழவும் அருகில் உள்ள புனிதத் தலங்களுக்குச் சென்று வரவும் பயணிகள் பலர் நேற்றே குற்றாலம் வந்திருந்தனர்.
கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் மிகக் குறைந்த அளவே அருவியில் நீர் விழுந்தது. ஆர்ப்பரித்துக் கொட்டிய அருவியைப் பார்த்து மகிழந்தவர்களுக்கு நீர் குறைந்து மெலிதான அருவியைக் காணவே மனம் சங்கடப் பட்டது. இந்நிலையில் நேற்று குற்றால மலைப் பகுதியில் மழை பெய்தது. சுற்றுவட்டாரப் பகுதியிலும் லேசான தூறல் இருந்தது. இதனால் அருவியில் திடீர் நீர்வரத்து ஏற்பட்டது.