சென்னை: நடிகரும் எம்.எல்.ஏ.,வுமான கருணாஸைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது.
நடிகரும் திருவாடானை எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, முதலமைச்சரே என்னைக் கண்டு பயந்து செல்கிறார். நான் அடித்துவிடுவேனோ என்று பயந்து ஒதுங்கிச் செல்கிறார் என்றார்.
மேலும், காவல்துறை அதிகாரி குறித்து கையை வெட்டு காலை வெட்டு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பேசினார். மேலும், ஐயர், நாடார், வன்னியர் என்று சாதி ரீதியாகப் பேசியதுடன் சமூகப் பதற்றம் ஏற்படும் அளவுக்கு விஷமத் தனமாகப் பேசினார். இதை அடுத்து அவர் மீது புகார் தெரிவிக்கப் பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீஸார் கருணாஸை கைது செய்தனர்.
தொடர்ந்து புழல் சிறையிலும் அதன் பின்னர் பாதுகாப்பு கருதி வேலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ள கருணாஸை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னைப் பெருநகர நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று கூறப் பட்டுள்ளது. இதை முன்னிட்டு, வேலூர் சிறையில் உள்ள கருணாஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நாளை அழைத்து வருகின்றனர். இதே போல், தன்னை ஜாமீனில் விடக் கோரி கருணாஸ் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.