சென்னை: திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய காவல் துறையின் மனுவை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கருணாஸின் மீது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
செப். 16ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் குறித்தும் காவல்துறை அதிகாரி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ், சாதி ரீதியாக கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், தனது அமைப்பின் இளைஞர்களை கைய வெட்டு கால வெட்டு, கொலை செய்துட்டு வா என வன்முறையைத் தூண்டி தவறான பாதைக்குச் செல்ல வழிகாட்டியும் பேசினார்.
இதை அடுத்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கின் போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கருணாஸின் பேச்சு கொலை செய்யத் தூண்டும் வகையில் உள்ளதால் அவரது பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரினார். மேலும் கொலை செய்யக் கூடிய ஆட்கள் யாரும் கருணாசுடன் உள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
மேலும், காவல் அதிகாரி அரவிந்தன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருணாஸ் பேசியதற்கான காரணம், கொலை மிரட்டல் விடுத்ததன் பின்னணி குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் கூறினார்.
தென் மாவட்டங்களில் நடைபெற்ற சாதிய மோதல்களுக்கும், கருணாசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கூறினார். இருப்பினும், தனக்கு உடல் நிலை சரியில்லாததால் போலீஸ் காவலுக்கு அனுமதிக்கக் கூடாது என்று கருணாஸ் கேட்டுக் கொண்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதித்துறை நடுவர், காவல் துறையின் மனுவை தள்ளுபடி செய்தார். தொடர்ந்து ஜாமீன் கோரி கருணாஸ் தாக்கல் செய்த மனு நாளை விசாரிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். பின்னர் கருணாஸ் மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனிடையே, சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பான 2 வழக்குகளில் மீண்டும் காவல் துறையினர் கருணாஸை கைது செய்துள்ளனர்
திருவல்லிக்கேணி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் கருணாஸ் மீது பதிவு செய்திருந்த 2 வழக்குகளில் மீண்டும் கைது செய்துள்ளனர். ஏப்ரம் 10-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டத்தில் சில இடங்களில் வன்முறைச் சம்வங்கள் அரங்கேறின.
கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் தாக்கப்பட்டது தொடர்பாக வெளியான காட்சிகளின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கருணாஸின் ஆதரவாளர்கள் என திருவல்லிக்கேணி போலீசார் கண்டறிந்து கருணாஸ் உள்ளிட்டவர்கள் மீது தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். கொலை முயற்சி, கொலை மிரட்டல், உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த 2 வழக்குகளிலும் சட்டமன்ற உறுப்பினரான கருணாஸை திருவல்லிக்கேணி போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். எழும்பூர் 13-வது நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நாளை வேலூர் சிறையில் வழங்கி கருணாஸை இந்த வழக்கில் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்
இதனிடையே, கருணாஸ் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல். ஏ., பதவியை கருணாஸ் இழக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.