சென்னை: கள்ளக் காதலுக்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாகச் சொல்லி கணவன் கடுமையாகக் கத்தி சண்டை போட்டதால் விரக்தி அடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கள்ளக்காதல் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கொடூரமான தீர்ப்பின் பின்னே மறைந்துள்ள உண்மை முகம் இதுதான் என்று கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள் பொதுமக்கள்.
சென்னை நெசப்பாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பால் பிராங்க்ளின். இவர், அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். ஜான் பால், கடந்த 2016ஆம் ஆண்டில் புஷ்பலதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே ஜான்பால் தான் வேலை செய்யும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். இதை அறிந்த புஷ்பலதா, தனது கணவரை கண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து தம்பதியரிடம் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில், இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜான்பால் மிகவும் சீரியஸாக உச்ச நீதிமன்றமே கள்ளக் காதல் வைத்துக் கொள்வது சட்டப்படி தவறில்லை என்று கூறியுள்ளது, எனவே நீ என்னைப் பற்றி எங்கு புகார் செய்தாலும், அது குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது, என்னை எவராலும் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார் புஷ்பலதா. உச்ச நீதிமன்றமே கள்ளக் காதலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்துள்ளதால், இனி தன் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ என்ற கவலையிலும் மனவேதனையிலும் இருந்த புஷ்பலதா, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த எம்ஜிஆர் நகர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புஷ்பலதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
புஷ்பலதாவின் சாவுக்கு உச்ச நீதிமன்றத்தின் கள்ளக்காதல் தீர்ப்பே காரணம் என்று பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.