ஸ்ரீவில்லிபுத்தூர்: மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்ததால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்ராயிருப்பை அடுத்து உள்ளது சதுரகிரி மலை. சித்தர்கள் வாசம் செய்யும் மலை என்று பக்தர்கள் கொண்டாடும் சதுரகிரி மலைக்கு அமாவாசை, பௌர்ணமி தினங்களில் அதிகளவிலான பக்தர்கள் சென்று மலை மேல் இருக்கும் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சிவாலயங்களை தரிசித்து வருவர்.
வனத்துறை கட்டுப் பாட்டில் பராமரிக்கப் படும் பகுதி என்பதால், இந்தக் கோயில்களுக்குச் செல்ல வனத்துறை அனுமதி தேவை. இந்நிலையில் கடந்த நில நாட்களாகப் பெய்து வந்த மழையால், சதுரகிரி பகுதியில் உள்ள ஆற்றில் நீர் அதிக அளவில் வருவதாலும், பாதுகாப்பற்ற வழி என்பதாலும் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் வனத்துறை தடை விதித்துள்ளது.
முன்னதாக நேற்று அனுமதிக்கப்பட்டு, திடீரென்று இன்று மீண்டும் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
முன்னதாக, புரட்டாசி 3ஆம் சனிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படும். ஆனால் ரெட் அலார்ட் என்ற காரணம் சொல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள #சதுரகிரி #காட்டழகர_கோவில் #ராக்காச்சி_அம்மன்_கோவில் #அய்யனார்_கோவில் #சாஸ்தா_கோவில் #பேச்சியம்மன்_கோவில் என்று புகழ்பெற்ற எந்தக் கோவிலுக்கும் பக்தர்களும் பூசாரிகளும் செல்ல தடை விதிக்கப் பட்டது பக்தர்களுக்கு பெரும் வேதனையைத் தந்தது.
எத்தகைய மழை வெள்ளத்தை எல்லாம் இந்தப் பகுதிகளைத் தாண்டி தரிசித்து இருப்போம் இப்போது மழை வருமா வராதா எனக் கூடத் தெரியாது ஆனால் ஆண்டவனை தரிசிக்க தடையா என்று அன்பர்கள் கொதித்துப் போய் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு ஏற்ப திடீர் என ரெட் அலார்ட் பின்னர் விலக்கிக் கொள்ளப் பட்டது. ஆனால், பக்தர்களுக்கு இந்த வருடம் 3ஆம் சனிக்கிழமை தரிசனம் இல்லாமல் போனது.