தமிழில் அறிவியல் எழுத்துகளை மிக எளிமையாகவும் அதே சமயம் அதன் ஆழம் குறையாமலும் எழுதியவர் என்.ராமதுரை. இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 85. தமிழ் அறிவியல் உலகம் இவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.
என். ராமதுரை மிகுந்த ரசனையுடன் வெற்றிலை போட்டுக் கொள்பவர். அவரிடம் ஒரு வெற்றிலையைக் கேட்டுப் போட்டுக்கொள்ள மாட்டோமா என்ற அளவுக்கு மிகுந்த பொறுமையுடன் ரசித்து வெற்றிலை போட்டுக்கொள்வார். ஜோல்னாப் பையில் வெற்றிலைப் பெட்டி இல்லாமல் எங்கும் வரமாட்டார்.
கிழக்கு பதிப்பகம் மூலம் விண்வெளி, அறிவியல் ஏன் எதற்கு எப்படி, அணு அதிசியம் அற்புதம், எங்கே இன்னொரு பூமி, சூரிய மண்டல விந்தைகள் போன்றவை வெளிவந்தன. தொகுத்து வரவேண்டிய புத்தகங்கள் இன்னும் உள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்பே தினமணியில், தினமணி சுடர் இணைப்பில் தொடர்ச்சியாக அறிவியல் குறித்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். அண்மைக் காலத்திலும் தினமணி நாளிதழில் நடுப்பக்க அறிவியல் கட்டுரைகளை எழுதிவந்தார். தினத்தந்தியிலும் இன்னும் சில நாளிதழ்களிலும் பணி புரிந்திருக்கிறார்.
- செய்தி: ஹரன் ப்ரசன்னா