தாயார் ஆண்டாளை இழிவுபடுத்திப் பேசிய கவிஞர் வைரமுத்து, வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக துாங்கக்கூடாது என பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா பேசினார்.
சபரிமலையின் புனிதம் காக்கக் கோரி மதுரையில் நேற்று நடந்த பாஜக., மகளிர் அணி யாத்திரையைத் துவக்கி வைத்துப் பேசினார் ஹெச்.ராஜா.
அப்போது அவர் பேசியதாவது… இந்துக் கோவில்களை சான்றோர், ஆன்றோர் கொண்ட வாரியத்திடம் அரசு ஒப்படைக்க வேண்டும். திராவிட இயக்கங்களால் இந்துக் கோவில்களில் நடக்கும் கொள்ளையை நிறுத்தாமல் ஓய மாட்டேன்.
கடந்த 1950ல் சபரிமலை நடையைத் திறக்க மேல்சாந்தி சென்றபோது, உள்ளே விக்ரகங்கள் தீயில் எரிந்து கிடந்தன. அன்றிலிருந்து இன்று வரை சபரிமலையை அபகரிக்க சதி நடக்கிறது. அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட எங்கள் பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் என்கின்றனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றது போல கேரள அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு ஆதரிக்கும்.
எல்லா சமுதாய சீர்கேடுகளுக்கும், திராவிட இயக்கங்கள்தான் காரணம். தாயார் ஆண்டாளை இழிவுபடுத்திப் பேசிய வைரமுத்து, வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக இனி தூங்கக் கூடாது. இமேஜ் குறித்து கவலைப்படாமல் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் கூற முன்வந்தது வரவேற்கத் தக்கது. இதற்காக பெண்களை கொச்சைப்படுத்தக் கூடாது. இதனால் அவர்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் எதிர்காலத்தில் குறையும் என்று பேசினார்.