தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய அம்சமாக வெள்ளிக்கிழமை இன்று காலை உலகம்மன் தேரோட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ளது புகழ்பெற்ற உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவில். இந்தக் கோவிலில் ஐப்பசி மாத திருக்கல்யாண உத்ஸவத்தை முன்னிட்டு, தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
தேரை வடம் பிடித்து இழுப்பதற்காக, தொகுதி எம்.எல்.ஏ., மோகன்தாஸ், காவல் துறை உயரதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் என பலரும் தயாராக இருந்தனர். பக்தர்கள் தேரின் இடது புறமும் எம்எல்ஏ., அதிகாரிகள் உள்ளிட்டோர் தேரின் வலது புறமும் நின்று தேர் வடத்தைப் பிடித்து இழுத்தனர். தேர் நிலையை விட்டு நகர்ந்த சில அடிகளில், இடது புறம் இருந்த தேர் வடத்தின் இரும்புக் கம்பி அறுந்தது.
இதைக் கண்டு பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இரும்புக் கம்பிகளை சரி செய்ய நபர்கள் வரவழைக்கப்பட்டு அறுந்த கம்பி சீராக்கப்பட்டது. அதன் பின்னர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நான்கு ரத வீதிகளிலும் தேரோட்டம் சிறப்பாக தடையின்றி நடைபெற்றது. தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தேரோட்டத்தின் தொடக்கத்தில் கம்பி அறுந்ததால், ஏதேனும் அபசகுனமாக இருக்குமோ என்று பக்தர்கள் பேசிக் கொண்டனர்.