ஆளுங்கட்சியின் தவறுகளை மறைத்து மக்களை திசை திருப்பவே சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்துவதாக, அமமுக., து.பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை, சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார் டி.டி.வி.தினகரன்.
அப்போது அவர் கூறியவை… 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவு சரியானது என்றும் இடைத்தேர்தல் சந்திப்பது சரிதான் என்றும் சசிகலா கூறினார்.
சர்கார் விவகாரத்தில் ஆளும் கட்சியினரின் அணுகுமுறை தவறானது. நடுநிலையுடன் சர்கார் படத்தை எடுக்கவில்லை. இலவச தொலைக்காட்சியை எரித்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பவர்கள் அரசியலுக்கு வந்தால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
மக்களை திசை திருப்பும் நோக்கில் ஆளும் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஆளுங்கட்சியினர் ஏன் போராடவில்லை? – என்று கேள்வி எழுப்பினார் தினகரன்.