நாகை: வேதாரண்யத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு மேற்கொண்டார். வெள்ளப்பள்ளம், கச்சவெளியில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் ஆளுநர் புரோஹித்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை பார்வையிட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். வேதாரண்யம் பகுதியில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இன்று 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் பகுதிக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நிவாரணப் பணிகள் நடைபெறுவது குறித்து ஆட்சியர் சுரேஷ்குமார் மற்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
பின்னர், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்த ஆளுநர், தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, ஆறுதல் தெரிவித்தார்.