Home உள்ளூர் செய்திகள் மேகதாது குறித்த முதல்வர் எடப்பாடியாரின் தீர்மானம்… அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு!

மேகதாது குறித்த முதல்வர் எடப்பாடியாரின் தீர்மானம்… அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு!

13 June28 Edapadi palani samy - Dhinasari Tamil
கோப்புப் படம்

மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் மேகதாது அணை கட்ட உத்தேசித்திருக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

”தீர்மானத்தை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிய அவர், மத்திய நீர்வள குழுமம் அனுமதி அளித்திருப்பது நம்மை கொதிப்படைய செய்துள்ளது என்றார். மேலும்,  இந்த அனுமதியை திரும்பபெற மத்திய நீர்வள அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, மேகதாதுவில் அணை கட்ட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு கண்டனம்  தெரிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி! இந்த அனுமதியை திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியாது. எனவே கர்நாடகத்தில் லாபம் அடையலாம் என்ற எண்ணத்தில் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கே.ஆர்.ராமசாமி பேசினார். மேலும், மேகதாது அணையை தடுக்க சட்டரீதியாக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நீர்ப் பங்கீட்டு முறையில் 15 ஆண்டுகளுக்கு எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய நீர்வள குழுமத்தின் அனுமதி உள்ளது  என்று ஐயூஎம்எல் கட்சி எம்.எல்.ஏ அபுபக்கர் பேசினார்.

தமிழகத்தை மத்திய நீர்வளக் குழுமம் வஞ்சிக்கிறது, எப்படி அனுமதி கொடுத்தது என்பது தெரியவில்லை; மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஆதரவாக உள்ளது என்று அபுபக்கர் குற்றம் சாட்டினார்.

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல இருக்கிறது கர்நாடக அரசின் செயல்பாடு; இது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று தனியரசு கூறினார்.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி நீர் 20க்கும் மேற்பட்ட தமிழக மாவட்டங்களின் நீர் ஆதாரத்தை பூர்த்தி செய்கிறது. காவிரி நீர் டெல்டா மக்களுக்கு ஆதாரமாக உள்ளது; பல்வேறு அணைகளை கட்ட கர்நாடகா முன்பிருந்தே முயற்சித்து வருகிறது; காவிரியில் தமிழகத்திற்கு அதிக உரிமை உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி பதிலுரை அளித்தார்.

மேலும் அவர், காவிரி ஒப்பந்த ஷரத்துக்களை மீறும் வகையில் கர்நாடக அரசின் செயல் உள்ளது

* பாசன பகுதிகளை கர்நாடகா 27 லட்சம் ஹெக்டேர் வரை உயர்த்தி உள்ளது

* பாசன பகுதியை உயர்த்தியதால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்கு நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது

* சிவசமுத்திரம், மேகதாது நீர்மின் திட்ட விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படும் கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது – முதல்வர்.

* காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அரசிதழில் வெளியிடப்பட்டு தீர்ப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது !

* உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் மாதந்தோறும் நீர் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்தது!

* கர்நாடக அரசின் எந்த திட்டத்திற்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்க கூடாது என ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டுள்ளது !

* மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்று கடிதம் எழுதினேன், பிரதமரை சந்தித்தும் வலியுறுத்தினேன்!

* மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கிய உடனே, கர்நாடகாவின் தன்னிச்சையான நடவடிக்கையை கண்டித்து பிரதமருக்கு கடிதம் எழுதினேன் !

* புதிய அணை, நீர்த்தேக்கம் என எதையும் கட்டக்கூடாது என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது, கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம் என்றார் முதல்வர்.

மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், டிடிவி  தினகரன், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version