சீத்தாராம் யெச்சூரி தேர்வு: கருணாநிதி மகிழ்ச்சி

சென்னை:

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக சீத்தாராம் யெச்சூரி தேர்வுசெய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர்  கருணாநிதி மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

2010ஆம் ஆண்டு, கழக ஆட்சியில் கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்ற போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கலந்து கொண்டவர் நண்பர் சீதாராம் யெச்சூரி. செம்மொழி மாநாட்டில் அவர் ஆற்றிய உரை சிறப்பாகவும், ஆக்கப் பூர்வமானதாகவும் இருந்தது.

அவர் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தற்போது தேர்வு பெற்றதும் ஆற்றிய முதல் உரையிலேயே “நம்முன் உள்ள முக்கிய பணி, இடதுசாரிகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைப்பது தான்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

அரசியலில் சாதாரணத் தொண்டராக இருந்து, தன்னுடைய ஆர்வம் மிக்க உழைப்பாலும், அறிவாற்றலாலும் படிப்படியாக அரசியலில் முன்னேற்றம் கண்ட அருமை நண்பர் யெச்சூரி அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஆகியிருப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் – என்று கூறியுள்ளார்.