இன்ஸ்பெக்டரைத் தாக்கிய மாணவர் மீது அரசியல் ‘கருணை’

சென்னை: சென்னையில், கோவில் கும்பாபிஷேகத்தில், கல்லூரி மாணவர் ஒருவர், இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவம், போலீசார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை குரோம்பேட்டை, எம்.சி., நகர், முதல் பிரதான தெருவில் சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில், பம்மல், மூங்கில் ஏரி, பொன்னி நகர், பாரதியார் தெருவை சேர்ந்த பாண்டி மகன் பாலச்சந்தர், 18, என்பவரும் இருந்தார். படப்பை தனியார் பொறியியல் கல்லூரி, மூன்றாமாண்டு மாணவரான அவர், போலீசார் பாதுகாப்புக்காகப் போட்டிருந்த தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் திருமலை, மாணவரை தடுத்து நிறுத்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், மாணவர், திருமலையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவரை அங்கிருந்த போலீசார் பிடித்து, சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தகவலறிந்த ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் சிபாரிசில், மாணவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யக்கூடாது என, போலீசாருக்கு உத்தரவு சென்றதாக கூறப்படுகிறது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களிடம், மாணவர் பாலச்சந்தர் தகராறில் ஈடுபட்டதாக சிறிய வழக்கு பதிவு செய்து, அபராதத் தொகை மட்டும் வசூலிக்கப்பட்டதாம். இது குறித்து போலீசார் சிலர் கூறுகையில், பணியில் இருந்த இன்ஸ்பெக்டரை, கல்லூரி மாணவர் ஒருவர், பொது இடத்தில் தாக்கியதற்கு, வழக்கு பதிவு செய்ய இயலவில்லை எனில், கீழ் நிலையில் உள்ள எங்களை போன்ற சாதாரண காவலர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உத்திரவாதமும் இல்லை எனப் புலம்பினர்.