சென்னையில் தீ விபத்தில் பிளஸ் 2 மாணவி பலி

சென்னை: சென்னை திருவான்மியூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பிளஸ் 2 மாணவி பலியானார். சென்னை திருவான்மியூர் திருவீதி அம்மன் கோயில் பிரதான சாலையைச் சேர்ந்த சேகர், அங்குள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி யாக வேலை பார்த்து வரு கிறார். இவரது மனைவி மேரி. இவர்களின் மகள் ஐஸ்வர்யா(18). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். நேற்று காலை வழக்கம் போல சேகர் வேலைக்குச் சென்றுவிட, மேரி கடைக்கு செல்ல, ஐஸ்வர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது, திடீரென வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்த, அப்பகுதி மக்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்த போது உள்ளே ஐஸ்வர்யா உடல் கருகி இறந்த நிலையில் இருந்தார். வீட்டில் இருந்த கட்டில், பீரோ, துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாகியிருந்தன. இதைத் தொடர்ந்து திருவான்மியூர் காவல் துறையினர் ஐஸ்வர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐஸ்வர்யா தனக்கு தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது சமையல் செய்யும் போது ஸ்டவ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதா அல்லது இது ஏதாவது சதிச்செயலா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். .