மணக்கோலத்தில் தந்தை இறுதி சடங்கில் பங்கெடுத்த மகள் கனிமொழி….!

மணக்கோலத்தில் தந்தை இறுதி சடங்கில் பங்கெடுத்த மகள் கனிமொழி....!

மணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் ராஜகுரு. செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகள் கனிமொழி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜகுரு-கனிமொழி ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

நேற்று திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் முடிவு செய்து, லால்குடி வடக்கு அய்யன்வாய்க்கால் அருகில் உள்ள திருமண மண்டபத்தை பதிவு செய்து திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்துள்ளனா்.

மணமகள் கனிமொழியின் தந்தை நடராஜனுக்கு கடந்த ஒருமாதங்ளுக்கு முன்பு தலையில் கட்டி ஏற்பட்டு பாதிக்கப்பட்டதால், அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே திருமண ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும் தடபுடலாக செய்து வந்தனர்.

இந்த நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த வி‌ஷயம் மணமகளின் அண்ணன் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே தெரியும். தந்தை இறந்த தகவலை தெரிவித்தால் தனது சகோதரியின் திருமணம் நின்று விடும் என்று கருதிய கனிமொழியின் அண்ணன், அந்த தகவலை மறைத்து, சகோதரியின் திருமணத்துக்கு செல்லாமல் மருத்துவமனையில் இருந்து விட்டார்.

நேற்று காலை ராஜகுரு- கனிமொழி திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது. அனைத்து திருமண சடங்குகளும் நிறைவடைந்தன.

அந்த சமயத்தில் மணமகளின் உறவினர் ஒருவர் நடராஜன் இறந்த தகவலை அங்கிருந்த சிலரிடம் தெரிவிக்கவே, அந்த தகவல் திருமண மண்டபம் முழுவதும் பரவியது.

இதைக்கேட்ட மணமகள், அவரது தாய், சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். மணமகன் குடும்பத்தினர் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். திருமணத்திற்கு வந்த அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.

இதையடுத்து அனைவரும் மருத்துவமனை சென்று உடலை ஊருக்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை நடராஜன் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் மணக்கோலத்துடன் மணமகள் கலந்து கொண்டது காண்போரை கண்கலங்க வைத்தது. காலையில் மகள் திருமணம் நடந்த நிலையில், மாலையில் தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

பெற்ற தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை அண்ணன் நடத்தி முடித்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...