மகனை கண்டுபிடித்து தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்; ஆட்சியரிடம் தாய் மனு…..!

 மகனை கண்டுபிடித்து தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் ஆட்சியரிடம் தாய் மனு.....!

ஏர்வாடி தர்காவில் 23 ஆண்டுகளுக்குமுன் தொலைந்துபோன மகனை தொடர்ந்து தேடி பாசப்போராட்டம் நடத்தி வரும் தாய் கலெக்டரிடம் மனு கொடுத்து மகனை மீட்க வலியுறுத்தினார்.

நாகை மாவட்டம் அய்யடிமங்கலத்தை சேர்ந்த பாலகுரு என்பவரின் மனைவி விஜயா. இவர் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் வீரராகவராவிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தானும் தனது கணவர் மற்றும் 4 மாத குழந்தை சேகர் ஆகியோர் கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி ஏர்வாடி தர்காவிற்கு பிரார்த்தனைக்காக வந்திருந்தோம். தர்கா பகுதியில் உள்ள மரத்தடியில் தங்கியிருந்த 4 மாத குழந்தை சேகரை காணவில்லை. யாரோ கடத்தி சென்றுவிட்டனர்.

எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனது குழந்தையை யாருக்கோ தத்து கொடுப்பதற்காக மர்ம கும்பல் கடத்தி சென்றுவிட்டதாக தெரியவருகிறது.

மகனை என்றாவது ஒருநாள் கண்டுபிடித்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் நான் கடந்த 23 ஆண்டு காலமாக பல்வேறு இடங்களில் தேடிவருகிறேன்.

மாவட்ட நிர்வாகம், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு என்று மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தும் இதுவரை போலீசார் கண்டுபிடித்து ஒப்படைக்கவில்லை.

23 ஆண்டுகளாக தேடியும் இதுவரை மகன் கிடைக்கவில்லை.

எனது வாழ்நாள் முடிவதற்கு முன் ஒருநாளாவது எனது மகனை கண்ணால் பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் இதுநாள் வரை உயிர்வாழ்ந்து தேடிவந்தேன்.

எனது கணவரும் என்னை விட்டு பிரிந்து மற்றொரு மகன், மகள் ஆகியோரையும் உடன் அழைத்து சென்றுவிட்டார்.

தற்போது தன்னந்தனியாக கோவில்களில் தங்கியிருந்து பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறேன்.

என் மகன் மீது வைத்துள்ள பாசத்தை உணர்ந்து அவனை மீட்டுத்தாருங்கள். பலமுறை குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

இனியும் எனது மகனை கண்டுபிடித்து தரவில்லை என்றால் நான் வாழ்வதில் பயனில்லை. தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழியில்லை. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவராவ் நீண்டகாலமாக மகனை தேடி போராடிவரும் பெண்ணின் புகார் குறித்து விரைந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...