மதுரையில் கொரியர் டெலிவரி பாய் போல வந்து 32 லட்சம் ரூபாய் மற்றும் 48 சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை சின்ன கண்மாய் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். அவர் அப்பகுதியில் சொந்தமாக ரைஸ் மில் மற்றும் நேரடி விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இதையடுத்து நேற்று அவரது வீட்டிற்கு கொரியர் கொடுப்பது போல இரண்டு இளைஞர்கள் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த பார்சலை கொடுப்பது போல் பாவ்லா செய்து கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை வெற்றிவேல் மீது தூவி உள்ளனர்.
மேலும் பார்சல் கட்டும் டேப்பால் அவரது வாயை சுற்றிய இருவரும் பெட்ரூமில் தள்ளி பூட்டினர்.
இதை தொடர்ந்து வீட்டில் இருந்த வயதானவர்கள் இரண்டு பேரையும் மற்றொரு அறையில் தள்ளி பூட்டிவிட்டு முதல் மாடிக்கு சென்ற இரண்டு பெரும் அங்கிருந்த 32 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினர்.
பின்னர் பூட்டிய அறையில் இருந்த 3 பேரின் கழுத்தில் அணிந்திருந்த 48 சவரன் நகைகளையும் மிரட்டி கழற்றி வாங்கி கொண்டு அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்றுவிட்டனர்.
மேலும் இது தொடர்பாக வெற்றிவேல் தெப்பக்குளம் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பதிவான சி.சி.டிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர் துணை ஆணையர் சசிபோகன் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
இதை தொடர்ந்து அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்லும் நன்கு தெரிந்த நபர்கள் கொள்ளையடித்தார்களா அல்லது வேறு யாராவது ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
மேலும் மக்கள் நடமாட்டம் உள்ள மாநகரத்தின் மையப்பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.