காமராஜர் மடியில் வளர்ந்தவன் நான்திருப்பத்தூரில் நடந்த விழாவில் கமல்ஹாசன் பேச்சு
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்றது.
நிறுவனத்தலைவர் பி.கணேஷ்மல் தலைமை தாங்கினார். குங்குமம் ஜி.குமரேசன், சி.கே.டி.முரளி, ஜி.ஆர்.சாமிசெட்டி, ஒய்.டி.கிருபானந்தன், கே.எம்.சுப்பிரமணியம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கே.சி.எழிலரசன் வரவேற்றார்.
விழாவில் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அரசியலின் அடி நாதமே மக்கள் தான். அதை உணர்ந்து செயல்பட்டவர் காமராஜர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மக்கள் நீதி மய்ய தலைவனாக இல்லை. காமராஜரின் தொண்டனின், ரசிகனின் மகனாக கலந்து கொண்டிருக்கிறேன். அவரது மடியில் வளர்ந்தவன் நான். எங்களுடைய வீட்டுக்கு அவர் அடிக்கடி வந்திருக்கிறார்.
அவர் எந்த வீட்டு பிள்ளையாக இருந்தாலும் கேட்கக்கூடிய கேள்வியை என்னிடமும் கேட்டிருக்கிறார் ‘நன்றாக படிக்கிறாயா?’ என்று, அப்படிப்பட்டவர் கேட்டும் நான் படிக்கவில்லை.
ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டியில் எனது மாமா வீடு உள்ளது.
அங்கு நான் வந்ததில்லை. இவ்விழாவில் கலந்து கொள்ள முதன் முதலில் வந்திருக்கிறேன்.
இது உறவையும் மீறிய நிகழ்வு. இந்த நிகழ்ச்சியில் அரசியல் பேச இடம் இல்லை. இருப்பினும் அவர் கண்ட அற்புத கனவை யாரும் கலைத்து விடக் கூடாது என்பதை இங்கு கூறியாக வேண்டும்.
அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற அற்புதத்தை செய்தவர் காமராஜர். அப்படிப்பட்ட கல்வி ஒரு சிலருக்கு மட்டும் தான் என்ற நிலைக்கு சென்று விடக்கூடாது.
காமராஜர் கல்வியில் அற்புதத்தை செய்தார் என்றால் அது அவரது தனிமனித உத்வேகமாக இருந்தது.
அன்று கல்வி மாநில அதிகாரத்துக்குட்பட்டிருந்தது.
நம்நாட்டில் வேற்றுமைகள் நிறைய உண்டு. அந்த கலப்பு தான் இன்றும் நிலைத்திருக்கிறது.
நாட்டை முன்னேற்றியிருக்கிறது. அதன் எதிரொலியாக தான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன்.
இதை நடத்துபவர் வட மாநிலத்தில் இருந்து வந்தவர். இந்த கலப்பை பிரிக்க நினைத்தால் நாட்டுக்கும், மக்களுக்கும் கெடுதல் தான்.
இந்த விழாவை தடை செய்ய நினைத்தார்கள். இடம் தான் மாறியிருக்கிறது.
நிகழ்ச்சி மாறவில்லை. அவர்கள் எதிரிகள் இல்லை. ஆனால், மக்களுக்கு நன்மை கிடைப்பதை தடை செய்ய நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் விரோதிகள் தான்.
எனக்கு காமராஜரையும், பெரியாரையும் நிறைய பிடிக்கும்.
எந்த இடத்திலும், எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும், எதிர்த்தாலும் என்னுடைய தலைவன் யார்? என்பதை சொல்லும் தைரியம் எனக்கு உண்டு
நான் காந்தியின் தொண்டன் இல்லை, ரசிகன். காமராஜர் போன்ற தலைவர்கள் இனி கிடைக்க மாட்டார்கள். அவரை கிங் மேக்கர் என்பார்கள், அவரை குறைத்து மதிப்பிடக்கூடாது.
அவரை கன்ட்ரி மேக்கர் (நாட்டை உருவாக்குபவர்) என்று தான் சொல்லுவேன். நாட்டை உருவாக்கும் சிற்பி அவரைப் போன்ற பல சிற்பிகள் சேர்ந்து இந்த நாட்டை செதுக்கியிருக்கிறார்கள்.
நாம் சாதாரணமானவர்கள் இல்லை. அவர் போன்ற நல்ல தலைவர்களாக மாறுவோம். நாம் நன்மையை நோக்கி நகர வேண்டும், அது தானாக வெற்றியை தேடித்தரும்.
இவ்வாறு அவர் பேசினார்.