Home உள்ளூர் செய்திகள் சென்னை திருக்குறள்- ஆங்கில நூலை வெளியிட்ட ஆளுநர்!

திருக்குறள்- ஆங்கில நூலை வெளியிட்ட ஆளுநர்!

thirukkural-book-released
thirukkural book released

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விருப்பப்படி, கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் தொகுப்பில் தயாரான திருக்குறள் களஞ்சியம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை ஆளுநர் வெளியிட்டார்.

திருக்குறள் களஞ்சியம் என்னும் நூல் கலைமகள் சார்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை ஆளுநர் மாளிகையில் வெளியிடப்பட்டது.

கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் பல்வேறு அறிஞர் பெருமக்கள் திருக்குறள் நூல் உருவாக்கியபோது எழுதிய முன்னுரைகளையும், திருக்குறள் சம்பந்தமாக எழுதிய கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்கி இருந்தார். இந்த நூலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டார். தமிழ் அன்பர்கள், கலைமகள் வாசகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

இந்த வெளியீட்டு விழாவின்போது தமிழில் அறிஞர்களின் கட்டுரைகளை தொகுத்து இருப்பது போல் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் தொகுத்து நூல் ஆக்கினால் பல வெளிநாட்டவருக்கும், பல வெளி மாநிலத்தவருக்கும் அது பயன் உடைய பொக்கிஷமாக இருக்கும் என்று மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து தெரிவித்தார்.

இதை மனத்தில் கொண்டு ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல்களைச் சேகரித்து அறிஞர் பெருமக்களின் முன்னுரைகளைத் தொகுத்து ‘தி டிரஷர் கால்டு திருக்குறள்’ என்று தலைப்பிட்டு நூலைத் தொகுத்துள்ளார் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்.

இந்த நூலின் வெளியீடு, டிச.9 அன்று, ஆளுநர் மாளிகையில் எளிய வகையில் நடைபெற்றது. கலைமகள் பதிப்பாளர் பி டி டி ராஜன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் ஆகியோர் கலந்து கொள்ள, சென்னை ஆளுநர் மாளிகையில் ஆங்கில திருக்குறள் நூலின் முதல் பிரதியை ஆளுநர் பெற்றுக் கொண்டார்.

இந்த நூலைப் பெற்றுக்கொண்ட ஆளுநர் பன்வாரிலார் புரோஹித், இது கொரானா காலக்கட்டமாக இருப்பதால் பெரிய அளவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வெளியிட முடியவில்லை! எனவே,‌ இதையே வெளியீட்டு விழாவாக எண்ணிக் கொள்ளுங்கள் என்றார். பின்னர் இந்த நூலின் பிரதிகளை கலைமகள் பதிப்பாளர் ராஜனிடமும் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரிடமும் வழங்கி இந்த முயற்சியைப் பாராட்டுவதாகக் கூறினார். 90 ஆண்டுகளாக கலைமகள் இதழ் தொய்வின்றி சிறப்புடன் வெளிவருவதை அறிந்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் ஆளுநர் அப்போது குறிப்பிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version