
~ டி.எஸ்.வெங்கடேசன்
தீபாவளி என்றால் தித்திக்கும் இனிப்பு, வானை வண்ணஓளி வீசிட செய்யும் பட்டாசுகள், புத்தாடைகளுடன் தீபாவளி மலர் புத்தகங்கள் மனதுக்கு புத்துணர்ச்சி ஊட்ட வருகின்றன.
பிரபல நாளிதழ்கள், வார, மாத பத்திரிகைகள் தீபாவளி மலரை வெளியிட்டு வாசகர்களை மகிழ்ச்சியூட்டி வருகின்றன.
இந்த வரிசையில், விஜய பாரதம் தீபாவளி மலர் 2021 வந்துள்ளது. இதனை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் கடந்த 28ம் தேதி சென்னையில் வெளியிட்டார்.

314 பக்கங்களை கொண்ட இந்த மலரில் ஏராளமான கட்டுரைகள் வந்துள்ளன. அம்ருத மகோத்ஸவம் என்ற 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில், இதுவரை தெரிந்திராத பல விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தரமான வண்ணப் படங்கள் மலருக்கு மெருகேற்றுகிறது.
அட்டையில், பாரத சுதந்திர போரில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி போராடி இன்னுயிரை இழந்த தமிழக மறவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியடிகள் முதலான மிதவாதிகள், புரட்சி வழியில் போராடிய வாசுதேவ் பல்வந்த பட்கே முதல் நேதாஜி ,பகத்சிங் வரையிலான தலைவர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் நம்முடைய முன்னேர்களின் அரும்பெரும் தியாகத்தினார் கிடைத்த இந்த சுதந்திரத்தின் மதிப்பைப் போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் அமைந்துள்ளன.
முன்னணி பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகள் மலருக்கு அணி சேர்க்கின்றன. தேசிய சிந்தனைகள் கொண்டவர்கள் அவசியம் படிக்க வேண்டிய மலர் எனலாம்.
மலரின் விலை ரூ 100.
விஜயபாரதம், 79 முதல் தளம், டாக்டர் அழகப்பா சாலை, புரசைவாக்கம், சென்னை 600 084 என்ற முகவரியில் பிரதிகள் கிடைக்கும்.
இமெயில் முகவரி : [email protected]
தொலைபேசி எண் 044-26421271, 26420870.