குன்றத்தூரில் பெண்ணிடம் செயின் பறித்த இளைஞர் கைது; புதுவையில் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்

செயின் பறிப்பு சம்பவங்களை கேட்டு உள்ளுக்குள் குமுறும் பொதுமக்கள், குற்றவாளிகள் கையும் களவுமாக சிக்கும்போது ஊரே ஒன்றுகூடி அடித்தே கொல்லும் நிலை வரலாம்

சென்னை:

சென்னை குன்றத்தூரில் ஜெயஸ்ரீ என்பவரிடம் தங்கச் சங்கிலி பறித்த சிவா (19) என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார். சென்னை குன்றத்தூரில் 2 நாள்களுக்கு முன் கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்த ஜெயஸ்ரீயிடம், பின்னால் ஓடி வந்து நகை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார் சிவா. இவர், புதுச்சேரியில் தலைமறைவாக இருந்தார். இவரை சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் கைது செய்துள்ளது போலீஸ்.

சென்னையில் கடந்த சில நாட்களில் நடந்த இரண்டு செயின் பறிப்பு சம்பவங்கள், பொதுமக்களை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வண்ணாரபேட்டை மற்றும் குன்றத்தூரை சேர்ந்த இரண்டு பெண்களிடமும், பைக்கில் வந்த இளைஞர்கள் கழுத்துச் செயினை அறுத்துச் சென்றனர். அவர்களில் மேனகா என்ற பெண், செயினை காப்பாற்ற போராடி, திருடனிடம் இருண்டு விலக முயன்றபோது 100 அடி தூரத்திற்கு அந்த வழிப்பறிக் கொள்ளையனால் தரதரவென தரையில் விழுந்த நிலையில இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இப்போது மேனகா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பறிகொடுத்த சங்கிலி 15 சவரன். இப்படி ஒரே சங்கிலி அறுப்பில் கொள்ளையனாக மாறி ஒரு இளைஞன் நாலரை லட்சம் சேர்த்துவிட்டான் என்று பொருமித் தள்ளுகின்றனர் வலைத்தளங்களில்.

மாடர்ன் டிரெஸ், டாப் கிளாஸ் பைக், குடி, பெண்களோடு கும்மாளம்.. இதுபோன்ற விஷயங்களில் வெறியேறிப் போயிருக்கும் இளைஞர்களுக்கு, குறைந்த பட்சம் இரண்டே நிமிஷத்தில் சில லட்சத்தை தேற்ற ஒரே வழி, குடும்ப பெண்கள் கழுத்தில் கிடக்கும் தங்கச் சங்கிலிதான் என்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுமையில் இறங்கும் கொள்ளைக்கார இளைஞர்களை, பிடிப்பதில் காவல் துறை சுணக்கம் காட்டலாம். அப்படியே சிக்கினாலும் இதற்காகக் காத்திருக்கும் வக்கீல்கள் உடனே இவர்களை ஜாமினில் கொண்டு வந்து, ப்பூ, இவ்வளவுதான் என்றும் சொல்ல வைக்கலாம்..

இப்படியே போனால் என்னதான் நடக்கும்? இதுபோன்ற செயின் பறிப்பு சம்பவங்களை கேட்டு உள்ளுக்குள் குமுறும் பொதுமக்கள், குற்றவாளிகள் கையும் களவுமாக சிக்கும்போது ஊரே ஒன்றுகூடி அடித்தே கொல்லும் நிலை வரலாம்… என்று எச்சரிக்கை வாசகங்களை சமூக ஊடகங்களில் பலரும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், குன்றத்தூர் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிவா என்ற இளைஞர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

https://youtu.be/kfec7Wu2Nss