நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீர்மானங்களைத் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதிமுக பொதுக்குழு கூடியவுடன், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், அடுத்த பொதுக்குழு குறித்த அவரது அறிவிப்பும் நீதிமன்ற அவமதிப்பு என பன்னீர்செல்வம் தரப்பினர் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைச்சாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் நியமிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும், தீர்மானம் நிறைவேற்றியவர்களை தண்டிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. மேலும், ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட வேண்டும், அவைத் தலைவர் கூட்ட முடியாது எனவும் கூறியது.
நீதிபதிகள் கூறுகையில், ‛ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவிற்கு மட்டுமே பொருந்தும். அவைத்தலைவர் இல்லாமல் பொதுக்குழுவை எப்படி கூட்ட முடியும்? எனவே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்க முடியாது’ எனத் தெரிவித்தனர்.
வரும் 7 ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவைத்தலைவர் நியமனம் குறித்து நடந்த விவாதத்தில் பன்னீர்செல்வம் ஏற்று கொண்டாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள். என்றனர். மேலும் பொதுக்குழுவுக்கு தடை வேண்டுமெனில் அதற்கென தனி நீதிபதியிடம் மனுவை தாக்கல் செய்யுங்கள்.
இதற்கிடையே, 23 தீர்மானங்களை தவிர பிற தீர்மானங்களை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பினர் மேல்முறையீடு செய்து மனு அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி அனுமதி பெற்று நாளை மறுநாள் ஜூலை 6 ல்அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.