சென்னை வானகரம் அருகில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு நிகழ்ச்சியையொட்டி, போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெள்யிட்ட செய்திக்குறிப்பில், சென்னை, வானகரம் அருகில் இன்று (11.06.2022) நடைபெறும் நிகழ்ச்சியையொட்டி கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும் என்பதால் போக்குவரத்து மெதுவாக செல்லவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
ஆகவே, வாகன ஓட்டிகள், பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரையிலான சாலையில் இன்று (11.07.2022) காலை 06.00 மணி முதல் மாலை 04.00 மணி வரையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாத வண்ணம், தங்களது பயணங்களை முன்னேற்பாடாக மாற்றி அமைத்துக் கொள்ளவும், மாற்று பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தீர்மானங்கள் முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் இன்று (ஜூலை 11) மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் காலையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.